கமர்ஷியல் படங்களிலிருந்து வெளியே வந்துவிட்டேன் என்று ஜோதிகா தெரிவித்துள்ளார்.

ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் இந்தியத் திரையுலகில் ஓடிடி தளத்தில் வெளியாகும் முதல் படமாக அமைந்துள்ளது. மே 29-ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் இந்தப் படம் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தை விளம்பரப்படுத்த, கரோனா லாக்டவுன் என்பதால் ஜூம் செயலி மூலமாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ஜோதிகா. அப்போது கமர்ஷியல் படங்கள், பெண்களை மையமாகக் கொண்ட கதாபாத்திரங்கள் உள்ளிட்டவை குறித்துப் பேசினார்.

அந்தப் பேட்டியில் கமர்ஷியல் படங்கள் குறித்து ஜோதிகா கூறியிருப்பதாவது:

“கமர்ஷியல் படங்களில் பாட்டு, காதல் காட்சிகள் என்பதைத் தாண்டி வேறு எதுவும் பண்ண முடியாது. இந்த மாதிரி படங்களில் வித்தியாசமான களங்களில் நம்மைக் காண முடியும். நான் கமர்ஷியல் படங்களிலிருந்து வெளியே வந்துவிட்டேன். என்னால் முடிந்த அனைத்தையும் இப்போதுதான் செய்து வருகிறேன். அந்த சுதந்திரம் இப்போது இருக்கிறது. ‘பொன்மகள் வந்தாள்’ மாதிரியான படங்கள் எனக்கு வருவதில் மகிழ்ச்சி. நான் எந்தவொரு இயக்குநரிடமும் இந்தமாதிரி படங்கள் பண்ண வேண்டும் என்று கேட்கவில்லை. தானாகவே அமைகிறது. கமர்ஷியல் படங்கள் நிறைய வரவில்லை. அப்படி வந்தால் கூட, என் பசங்களை வீட்டில் விட்டுவிட்டு பாட்டுப் பாட, நடனமாடப் போக விரும்பவில்லை.

நிஜ வாழ்க்கையில் இருப்பது போலவே பெண்கள் படங்களிலும் வலுவாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். ஏனென்றால் நிஜவாழ்க்கையில் நிறையப் பணிகளை பெண்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இப்போது 2 குழந்தைகளுக்குத் தாயாக அதிகமான பொறுப்புள்ள பெண்ணாக இருக்கிறேன். அவர்களுக்கு வெறும் அட்வைஸ் மட்டும் செய்யாமல், என் படங்கள் மூலமாக அவர்கள் நான் எப்படி எனத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். குடும்பப் பெண்ணாக வித்தியாசமான பரிமாணங்களில் காண முடியும். நிஜ வாழ்க்கையில் நான் எப்படியிருக்கிறேனோ, அப்படியே திரையிலும் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்”.

இவ்வாறு ஜோதிகா தெரிவித்தார்.